கோழிகளின் முக்கியமான தீய பழக்கங்கள்

கோழிகளின் முக்கியமான தீய பழக்கங்கள்


  • கோழிகள் சில தீய பழக்கங்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. கோழிகளுக்கு தீய பழக்கங்கள் அவற்றின் இளம் வயதிலேயே இருந்தால், அவற்றை நீக்குவது மிகவும் கடினம்.
  • மேலும் கோழிகளின் தீய பழக்கங்களால் பண்ணையாளர்களுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படும். கோழிகளின் சில தீய பழக்கங்கள் பின்வருமாறு.
    • கோழிகள் தங்களுக்குள்ளேயே கொத்திக் கொள்ளுதல்
    • முட்டைகளை உண்ணுதல்
    • முட்டைகளை ஒளித்து வைத்துக் கொள்ளுதல்
    • உண்ணத்தகாத பொருட்களை சாப்பிடுதல்

கோழிகள் தங்களுக்குள்ளேயே கொத்திக் கொள்ளுதல்

  • இந்த பழக்கம் இருக்கும் கோழிகள் தங்களுடன் இருக்கும் மற்ற கோழிகளைக் கொத்தவும், தாக்கவும் ஆரம்பித்து அவற்றின் சதையை உண்ணும். இதனால் கோழிகளுக்கு அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டு இறப்பும் ஏற்படும்.
  • ஒரு கோழி மற்றொரு கோழியின் ஆசனவாயினைக் கொத்துவது ஒரு தீய பழக்கமாகும். கோழிகளில் இந்த தீய பழக்கம் வந்துவிட்டால் எளிதில் பண்ணையிலுள்ள மற்ற கோழிகளுக்கும் பரவிவிடும்.
  • இந்த பழக்கத்திற்கு சிகிச்சைகள் ஏதும் இல்லாததால், கோழிப்பண்ணையாளர், கோழிகளில் இந்தப் பழக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இறந்த கோழிகளின் உடலில் காணப்படும் புண்கள், மற்றும் கோழிகளின் உடலில் காயம் காணப்படுதல் போன்றவை இந்த தீய பழக்கம் கோழிகளில் இருப்பதின் அறிகுறிகளாகும்.

இப்பழக்கத்திற்கான காரணங்கள்

  • பண்ணையில் குறைந்த இடத்தில் அதிகமான எண்ணிக்கையிலான கோழிகளை வளர்ப்பதால், அவற்றிற்குக் கிடைக்கும் உடற்பயிற்சி குறைக்கப்பட்டு, சுறுசுறுப்பாக இருக்கும் கோழிகள் இந்த பழக்கத்திற்கு உள்ளாகின்றன.
  • சில கோழி இனங்களில் மரபு ரீதியாகவே இந்தப் பழக்கம் இருக்கிறது.
  • புதிதாக முட்டையிடும் கோழிகள், பெரிய முட்டைகளை இடும் போது அவற்றின் ஆசன வாய்ப் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்படும். இது பண்ணையிலுள்ள மற்ற கோழிகளை ஈர்த்து, அதனைக் கொத்த ஆரம்பிக்கும். பிறகு கோழிகள் இரத்தம் மற்றும் இறைச்சியின் சுவையினை உணர்ந்து அதற்காக மற்ற கோழிகளைக் கொத்த ஆரம்பிக்கும்.
  • தீவனத்தில் புரதச் சத்து குறைபாடு, தேவைப்படும் அளவினை விட குறைவாகத் தீவனம் அளித்தல், அதிகப்படியான மக்காச்சோளம் தீவனத்தில் இருத்தல் போன்றவையும் இப்பழக்கத்திற்கான முக்கியமான காரணிகளாகும்.
  • அர்ஜினின், மெத்தியோனின் போன்ற அமினோஅமிலங்களின் குறைபாட்டினாலும் இந்த தீய பழக்கம் ஏற்படுகிறது.
  • உப்புச் சத்து மற்றும் தாது உப்புகளின் பற்றாக்குறையாலும் இப்பழக்கம் கோழிகளில் ஏற்படுகிறது.
  • அக ஒட்டுண்ணிகளின் தாக்குதலால் கோழிகளின் உடலில் இறகுகள் கொட்டுதல், இரத்தக் கசிவு போன்றவையும் இப்பழக்கம் கோழிகளில் ஏற்படக் காரணமாக இருக்கிறது.
  • கோழிகளுக்கிடையே ஏற்படும் சண்டை இப்பழக்கம் ஏற்பட தூண்டுகோலாக இருக்கிறது.

இப்பழக்கத்தினைத் தடுத்தல்
நோய் வருவதற்கு முன்பே தடுத்தல் என்ற பழமொழி இந்த தீய பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான பழமொழியாகும்.

  • மிகவும் மலிவானதும், சமீப காலமாக பின்பற்றப்படும் இப்பழக்கத்தைத் தடுக்கும் மேலாண்மை முறை அலகு வெட்டுதல் ஆகும். கோழிக்குஞ்சுகளின் ஒரு நாள் வயதிலிருந்து எந்த வயது வரை வேண்டுமானாலும் அவற்றிற்கு அலகு வெட்டலாம்.
  • கைகளால் அல்லது இயந்திரங்களால் கோழிகளின் அலகினை வெட்டலாம். இயந்திரங்களின் உதவியால் கோழிகளின் அலகினை வெட்டும்போது இரண்டாம் முறை மீண்டும் அலகினை வெட்டத் தேவையில்லை. ஆனால் கைகளால் அலகுகளை வெட்டும் போது இரண்டாம் முறை மீண்டும் வெட்ட வேண்டியிருக்கும். மேல் அலகின் மூன்றில் ஒரு பங்கும், கீழ் அலகின் முனையினையும் வெட்ட வேண்டும்.
  • அலகு வரும் போது இரத்தம் வருவதைத் தடுக்க அலகினை வெட்டிய இடத்தினை சூடான இரும்பு தகட்டில் தேய்த்து விட வேண்டும். அலகு வெட்டுவதில் பயிற்சி பெற்றவரே அலகு வெட்ட வேண்டும். முறையாக அலகினை வெட்டாவிட்டால் அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்பட்டு, கோழிகள் தீவனம் உண்ணாமல் இறந்து விடும். தற்போது அலகு வெட்டுதல் எல்லாப் பண்ணைகளிலும் கட்டயமாகப் பின்பற்ற வேண்டிய செயல்முறையாகும்.
  • இப்பழக்கம் உள்ள கோழிகளை மற்ற கோழிகளிடமிருந்து தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.
  • காயமுற்ற கோழிகளைத் தனியாகப் பிரித்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்
  • மார்கோசா எண்ணெயினை தடவுவதால் கோழிகளின் மீது ஏற்பட்டுள்ள புண்கள் எளிதில் சரியாகி விடும்.
  • உடனே கோழிகளுக்கு அலகு வெட்டுதல்
  • அதிக அடர்த்தியாக இருக்கும் கோழிகளை உடனடியாக குறைக்க வேண்டும்.
  • எப்போதும் கோழிகளுக்குப் போதுமான அளவு தீவனம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • முட்டைப் பெட்டிகள் தனியாக, அமைதியாக இருக்கும் இடங்களில் வைத்து விட வேண்டும். இதனால் முட்டையிட்ட கோழிகளின் சிவந்த ஆசனவாயினை மற்ற கோழிகள் கொத்துவதைத் தடுக்கலாம்.
  • முட்டைப் பெட்டிகளுக்கு அருகில் சிவப்பு விளக்கு எரியச் செய்வதால் இப்பழக்கம் குறையும்.
  • சமைக்காத இறைச்சியினைக் கோழிகளின் தீவனத்தட்டில் போடுவதால் இப்பழக்கத்தைக் குறைக்கலாம். இறைச்சி கிடைக்காத போது, தீவனத்தில் கருவாட்டுத்தூளின் அளவினை அதிகரிக்கலாம்.
  • தீவனத்தில் வைட்டமின்கள், உப்பு, தாது உப்புகளின் அளவினை அதிகரிக்க வேண்டும்.
  • தீவனத்தில் மெத்தியோனின் அளவினை அதிகரித்தல்

முட்டையினை உண்ணுதல்

  • சில கோழிகளுக்குஅவற்றின் முட்டைகளை உண்ணும் பழக்கம் இருக்கும்.
  • இந்த தீய பழக்கத்தினை தடுப்பது மிகவும் கடினம்.
  • முட்டைகள் உடைந்திருந்தாலோ, அல்லது எதிர்பாராத விதமாக உடைந்திருந்தாலோ, கோழிகள் முட்டைகளின் ருசியினை அறிந்து கொண்டு, அவற்றின் முட்டைகளையே உடைத்து குடித்து விடும்.
  • முட்டைகள் உடைவதற்கும், வீரல் விடுவதற்கான காரணங்கள் பின்வருமாறு.ஓடு மெல்லியதாகவும், தோல் முட்டைகளாகவும்,போதுமான அளவு படுக்கைப் பொருட்கள் முட்டையிடும் இடத்தில் இல்லாதது.
  • கோழிக்கொட்டகையிலேயே முட்டைகளை நெடுநேரம் வைத்திருப்பதால் முட்டைகளை கோழிகள் உடைத்து குடிக்கும் பழக்கத்தைத் தூண்டும்.

தடுப்பு

  • தீய பழக்கம் இருக்கும் கோழிகளைத் தனியாக மற்ற கோழிகளிடமிருந்து பிரித்து வைத்தல்
  • தொழில் நுட்ப வல்லுநரிடம் கலந்தாலோசித்து, தீவனத்தில் புரதத்தின் அளவையும், கிளிஞ்சலின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.
  • முட்டைகளைக் குடிக்கும் கோழிகளை கூண்டுகளில் வைத்து பராமரிப்பதால், முட்டைகள் கூண்டுகளிலிருந்து வெளியே உருண்டு வருமாறு செய்து விடுவதால், கோழிகள் இட்ட முட்டைகள் கோழிகளுக்கு எட்டாது.
  • முட்டைகளுக்கு அலகு வெட்டுவதால் முட்டை உண்ணும் பழக்கம் கட்டுப்படுத்தப்படும்.
  • முட்டையிடும் இடத்தினை இருட்டாக வைத்திருப்பதால் முட்டைகளை உடைக்கும் பழக்கம் தடுக்கப்படும்.
  • முட்டைகளை சேகரிக்கும் இடைவெளியினை குறைத்துக் கொள்ள வேண்டும்.

முட்டைகளை ஒளித்து வைத்துக் கொள்ளுதல்

  • முட்டைகளை ஒளித்து வைத்துக் கொள்வது காட்டுக்கோழிகளின் தாய்மைப் பண்பாகும். ஆனால் இந்தப் பழக்கம் வணிகரீதியாக வளர்க்கப்படும் கோழிகளுக்கு இருக்காது. ஆனால் சில சமயங்களில் வணிகரீதியாக வளர்க்கப்படும் கோழிகளும் சில சமயங்களில் தன்னிச்சையாக சுற்றித் திரியுமாறு வளர்க்கப்படும் போது இந்தப் பழக்கம் தொற்றிக் கொள்ளும்.
  • இப்பழக்கம் உள்ள கோழிகள் முட்டைகளை வயல்கள் மற்றும் புதர்கள் போன்ற இடங்களில் ஒளித்து வைக்கும்.

தடுப்பு

  • கோழிகளின் தன்னிச்சையான நடமாட்டத்தைக் குறைத்தல்
  • முட்டைக் கோழிகளின் கொட்டகையின் உள்ளேயே முட்டையிடுவதற்கு தனியான இடத்தை ஒதுக்கி அதில் மரத்தூள் அல்லது வைக்கோலைப் போட்டு அவை முட்டையிடுவதற்கு வசதியான இடத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்ணத்தகாத பொருட்களை சாப்பிடுதல்

  • உண்பதற்கு ஏற்றதாக இல்லாத பொருட்களான இறகுகள், ஆழ்கூளம். நூல் போன்றவைற்றை கோழிகள் உண்ணுதல்
  • ஆனால் இந்தப் பழக்கம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளில் காணப்படுவதில்லை.
  • பாஸ்பரஸ் பற்றாக்குறை, ஒட்டுண்ணிகளின் பாதிப்பு, புதிதாக போடப்பட்ட ஆழ்கூளம் போன்றவை கோழிகளை இந்தப் பழக்கத்திற்குத் தூண்டும்.
  • முறையான மேலாண்மை முறைகள், சரிவிகித தீவனம் அளிப்பதால் இந்தப் பழக்கம் கோழிகளுக்கு வருவதைத் தடுத்துவிடலாம்.
 மேலே செல்க